Sunday, September 25, 2022

திரு . எஸ்.சி.சி அந்தோனிப்பிள்ளை ( யாழ்ப்பாணம்) சென்னை சூளை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் - வட சென்னை மக்களவை உறுப்பினர்

ஈழநாடு - யாழ்ப்பாணம் . 22 02 -1962

 ராதா  மனோகர் எஸ்.சி.சி அந்தோனிப்பிள்ளை ( யாழ்ப்பாணம்) சென்னை  சூளை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் - 1952–1957.
வட சென்னை  மக்களவை உறுப்பினர் 1957–1962
இவரின் முழுப்பெயர் செபஸ்தியான் சிரில் கான்ஸ்டன்டைன் அந்தோனிப்பிள்ளை (Sebastian Cyril Constantine Anthony Pillai, ஏப்ரல் 27, 1914 – ஆகஸ்ட் 16, 2000)
இலங்கை இடது சாரித்தலைவராகவும் பின்பு இந்திய இடதுசாரி தலைவராகவும் இருந்த ஒரு சுவாரசியமான அரசியல் வரலாறை கொண்டிருப்பவர்
யாழ்ப்பாணத்தில் பிறந்த இவர் யாழ் சென்ட் பற்றிக்ஸ் கல்லூரியில் கற்றார்.பின்பு  இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியில் சேர்ந்து வரலாற்றில் பட்டம் பெற்றார். பின்னர் இலண்டன் கிங்ஸ்  கல்லூரியில்  படித்தார். 

இவரை பற்றி ஒரு முக்கிய கோணத்தில் ஆய்வு செய்யவேண்டிய தேவை இருக்கிறது .
மறைந்த இலங்கை ஜனாதிபதி திரு ஜே ஆர் ஜெயவர்த்தனா அவர்கள் இவரை பற்றியும் அந்த காலத்து இலங்கை இடது சாரிகள் பற்றியும் சில முக்கிய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்
இலங்கை இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமை பறிப்பிற்கு இந்த இடது சாரி அரசியல்வாதிகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது..
அந்த விடயத்தை நோக்குவதற்கு ஒரு முன்னோடியாக திரு எஸ் சி சி அந்தோனிப்பிள்ளையின் வரலாறு ஒரு உசா  துணையாக இருக்கும் என்று கருதுகிறேன்  

இந்திய, இலங்கை, பர்மிய போல்செவிக்-மார்க்சியக் கட்சி 1948 இல்  இந்திய சோசலிசக் கட்சியுடன் இணைந்ததை அடுத்து அந்தோனிப்பிள்ளையும் அக்கட்சியில் சேர்ந்து .[
1948 முதல் 59 வரை சென்னை மாநகராட்சியில் உறுப்பினராக இருந்தார்.

1952 முதல் 1957 வரைசென்னை சூளை மேடு சட்டமன்ற உறுப்பினராக MLA  இருந்தார்.
1956 இல் லோகியா சோசலிஸ்டுக் கட்சியில் சேர்ந்தார்.
இக்கட்சியின் சார்பாக சுயேச்சை வேட்பாளராக 1957 இல்  வட சென்னை மக்களவைத் தொகுதியின் மக்களவை உறுப்பினராகத் MP ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்

Thursday, September 22, 2022

Hemp ஹெம்ப் வளரும் நாடுகளை வாழவைக்க போகும் பயிர்

ராதா மனோகர் : ஹெம்ப் செடியை பற்றி இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி டயானா கமகே MP பேசுகிறார்
ஆனால் பலருக்கும் இது பற்றிய புரிதல் இல்லாமல் இதை கஞ்சா செடி என்று கூறி மலின படுத்துகிறார்கள்  
எனவே இது பற்றிய சில உண்மைகளை இங்கே தெளிவு படுத்த முயல்கிறேன்
ஹெம்ப் செடியின் வகைகளில் ஒன்றுதான் கஞ்சா செடி . ஆனால் இரண்டும் ஒன்றல்ல
பெட்ரோலிய உற்பத்திக்கு ஒரு சரியான மாற்றாக விளங்குவது ஹெம்ப் செடியின் மூலம் பெறப்படும் பயோ டீசல்தான் . இது உலகம் ஏற்றுக்கொண்ட உண்மை
இதனால்தான் பெட்ரோலிய கம்பனிகள் நீண்ட காலமாக ஹெம்ப் கஞ்சாவின் தன்மை கொண்டது என்ற பிரசாரத்தை தங்களின் போலி ஆராய்ச்சியாளர்கள் மூலம் பரப்புரை செய்து பல தசாப்தங்களாக தடுத்து வைத்திருந்தார்கள் . தற்போது அந்த தடை மேற்கு நாடுகளில் இல்லை .

Tuesday, September 20, 2022

சிங்கள தீவினுக்கோர் பாலமைப்போம் ..1912 ஆம் ஆண்டு வெளியான விஜயபானு


 சிங்கள தீவினுக்கோர் பாலமைப்போம் என்று பாரதி பாடியது அவரின் தீர்க்க தரிசனம் என்று அவ்வப்போது ஒரு கதை அளக்கப்படுகிறது உண்மையில் அது அப்போது பத்திரிகைகளில் வந்த செய்தியாகும் . தீர்க்க தரிசனம் அல்ல!
  அதன் விபரங்களை கொஞ்சம் பாப்போம்
பாரதியார் காலமானது 1921 ஆண்டாகும்.
1912 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து வெளியான விஜயபானு என்ற தமிழ் பத்திரிகையில் இது பற்றிய ஒரு செய்தி இருக்கிறது   அப்பத்திரிகையில் இந்திய இலங்கை செய்திகள் பல இருக்கிறது
அதில் ஒரு செயதியின் தலையங்கமே
இலங்கை இந்திய புகையிரத பாதை என்பதாகும்
அதன் முழு செய்தி இதுவாகும்
இலங்கை இந்திய புகையிரத பாதை
இப்பாதை வேலையை இலங்கை அரசாட்சியார் தீவிரமாய் முடித்து வருகின்றர்.
தலைமன்னாரிற்கும் மன்னாரிற்கும் இடையிற்றான்  தாமதமிருக்கிறது.

Friday, September 16, 2022

ஈழகேசரி - 21 - 6 - 1936 : மனித உயிருக்கு மதிப்பில்லாத நாடு கொலைக்களமாக மாறிவரும் யாழ்ப்பாணம்


 ஈழகேசரி - 21 - 6 -  1936  :   மனித உயிருக்கு மதிப்பில்லாத நாடு கொலைக்களமாக மாறிவரும் யாழ்ப்பாணம்
எதற்கும் கத்தியை உருவும் எமகிங்கரர்
படித்த பதர்கள் இயற்றும் படுகொலைகள்
புத்திசாதுர்யம் நிறைந்த பொய் சாட்சிகள்
கைலஞ்சம் வாங்கும் கிராம அதிகாரிகள்
அரசாங்கம் கவனிக்க வேண்டிய அதி முக்கிய அம்சங்கள்
பயங்கரமான படுகொலைகளும் பலிகளும் இலங்கையில் முக்கியமாக யாழ்ப்பாணத்தில் தினே தினே அதிகரித்த வண்ணமாக இருக்கிறது

Sunday, September 11, 2022

மகாத்மா காந்தி யாழ்ப்பாணம் சுன்னாகம் திராவிட வித்தியாசாலைக்கு 27 - 11 - 1927 இல் அஸ்திவாரக்கல் நாட்டினார்.

யாழ்ப்பாணதில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த திராவிடன் பத்திரிகையின் 27 - 11 - 1927 ஆம் தேதி இதழில் இந்த செய்தி பதிவாகி இருக்கிறது .


 இலங்கைக்கு மகாத்மா வந்து திரும்பிவிட்டார்
மகாத்மா காந்தியவர்கள் தமது மனைவியார் பரிவார சகிதமாக இலங்கைக்கு வந்து யாழ்ப்பாணம் நாலு நாள் தங்கி இந்தியா திரும்பி விட்டனர்.


இதுமாதிரி இலங்கைக்கு இதுவரையும் வந்து  போன  .மற்றெவருக்காயினும் மகாத்மாவுக்கு காட்டப்படும் மரியாதையும் அன்பும் உபசாரமும் காட்டப்பட்டதே இல்லையெனலாம் .
மாகாத்மாவிற்கு இலங்கையில் வேண்டிய வசதிகள் யாவும் செய்து சந்தோஷமாக்கும்படி இந்திய பிரதி காவலர் இலங்கை தேசாதிபதியை கேட்டுக்கொண்டபடி தேசாதிபதியவர்கள் தனது மாளிகைக்கு அழைத்து விருந்திட்டு உபசரித்தார்.
மகாத்மா இலங்கைக்கு சென்றவிடமெல்லாம் மக்கள் அவரை தரிசித்தற் பொருட்டும் அவரின் பிரசங்கத்தை காதினாற் கேட்டற்கும் பதினாயிர கணக்கானோர் கூடி காந்திக்கு மனமுவந்து 60000 ரூபா வரையிற் கொடுத்திருக்கின்றனர்

Tuesday, September 6, 2022

இலங்கை சிங்கள மக்களில் பெரும்பான்மையோர் தென்னிந்தியாவில் இருந்து குடிபெயர்ந்தவர்கள்.

 


ராதா மனோகர்
: இலங்கையில் உள்ள சிங்களவர்கள்  பெரும்பான்மையோர் தென்னிந்தியாவில் இருந்து குடிபெயர்ந்தவர்கள்.
சைவ வைணவர்களின் கொடுமைக்கு அஞ்சி இலங்கைக்கு குடிபெயர்ந்த திராவிடர்கள் தங்கள் பௌத்த மதத்தை காப்பதற்காக சிங்கள மொழியை பயன்படுத்தினா
ர்கள்   காலப்போக்கில் அது அவர்களின் தாய் மொழியானது
இது எல்லோருக்கும் தெரிந்த உண்மையாக இருந்தாலும் பலரும் பொதுவெளியில் ஒப்புக்கொள்வதில்லை
தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக தமிழ் அரசர்களும் அவர்களை போலவே கடும் போக்கை கொண்டிருந்த  தமிழ் தேசியர்களின் வரலாற்று பின்னணியில் இருந்து இதை நோக்கவேண்டும் என்று கருதுகிறேன். 
எப்போதும் பிற சமூகங்களை இழிவாக கருதும் ஒரு இனவாத போக்கு தமிழர்கள் மத்தியில் பரவியதும் ஒரு காரணமாக  இருக்கலாம்
:" நானூறு ஆண்டுகளுக்கு முன்பு எனது முன்னோர்கள் இந்தியாவில் இருந்த வந்த தமிழர்கள்தான் . நான் இப்போது சிங்களவன் . இதில் என்ன தவறு இருக்கிறது?"

இப்படி கூறியவர் ஒரு சாதாரண மனிதரல்ல . இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக நீண்ட காலம் உச்சத்தில் கோலோச்சிய ஒரு பெரும் அரசியல் தலைவராகும்.
இலங்கையின் நீர்ப்பாசன திட்டங்களின் தந்தை என்று கூறக்கூடிய அளவு நீர்ப்பாசன மின்சக்தி அமைச்சராகவும் நிதியமைச்சராகவும் இன்னும் பல்வேறு பொறுப்புக்களை அரசியலிலும் அரசு நிர்வாகத்திலும் தனது திறமையை நிரூபித்த தலைவர் கௌரவ சி பி டி சில்வா அவர்களே இந்த கூற்றை கூறியிருக்கிறார்
இலங்கை தமிழ் அரசியலில் மிகபெரும் ஆளுமையாக அறியப்பட்ட திரு வி நவரத்தினம் அவர்களிடம் தான் இந்த கூற்றை திரு சி பி டி சில்வா கூறியிருக்கிறார் .  வி நவரத்தினம் கூறுகையில்,  சி.பி. டி சில்வா - ஒருமுறை எங்களில் சில - தமிழ் எம்.பி.க்களிடம், 'என்னைப் பாருங்கள். நானூறு ஆண்டுகளுக்கு முன்பு என் முன்னோர்கள் இந்தியாவில் இருந்து வந்த தமிழர்கள். நான் இப்போது சிங்களவன். அதில் என்ன தவறு இருக்கிறது. ?'" தமிழ் தேசத்தின் வீழ்ச்சியும் எழுச்சியும் பக்கம் 130.

Friday, September 2, 2022

நல்லூர் கோயில் வழக்கு! தீர்ப்பு - முழுவிபரம் . part 5 - last part

நல்லூர் கோயிற் பரிபாலனைத்தை பற்றிய தீர்ப்பு - முழுவிபரம்
 யாழ்ப்பாணம் பெரிய நீதிஸ்தலத்தில் நல்லூர் கந்தசாமி கோயிற் பரிபாலன முறையை பற்றி 2 ஆம் பிரிவு வியாச்சியத்திற்கு மேற்படி நீதிபதியவர்கள் பின்வருமாறு தீர்ப்பு செய்தனர்.
இத்தீர்ப்பில் கோயிலதிகாரியினுடைய கடமைகள் வரையறுக்கப் பட்டிருத்தலோடு மேற்படி அதிகாரிக்கு துணை செய்வதற்கு கல்வி அறிவும் ஒழுக்கமுற்ற இன்னுமொருவர் (கமிஷனர்) நியமிக்கப்படல் வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது
1 குறித்த கோயிலதிகாரி இரு லேககர்களை ஏற்படுதல் வேண்டும். அவர்களுடைய மாச வேதனம் 35 ரூபா தொடக்கம் 50 ரூபா வரை கொடுக்கப்படும் ..  
இந்த லேககர்களில் ஒருவர் கோயிலதிகாரியாலும்  மற்றவர் கமிஷனராலும் நியமிக்க படல் வேண்டும் .ஆனால் இரு லேககர்களும் கோயிலதிகாரி   கமிஷனர் ஆகிய இருவருக்குடைய கட்டுப்பாட்டுகள் அமைந்து நடத்தல் வேண்டும்.

Tuesday, August 30, 2022

நல்லூர் கந்தசாமி கோயில் வழக்கு - 1928 - part 4

 ஸ்ரீ சின்னத்தம்பி ராமநாதன் சொன்ன சாட்சியம்
மிஸ்டர்ர் ஹெயிலி : நல்லூர் கந்தசாமி கோயிலை பற்றி உமக்கு தெரியுமல்லவா? ஆம்
கோயிலுக்கும் உமது வீட்டிற்கும் எவ்வளவு தூரம் இருக்கும்? 100 யார் இருக்கும்
அங்கே எவ்வளவு காலம் இருந்திருக்கிறீர்? 27 வருட காலம்
நீர் கந்தசாமி கோயிலுக்குள் கிரமாமாய் போவதா? ஆம்
எவ்வளவு காலமாய் போய் வருகிறீர்? 32 வருட காலமாக
கிரமமாய் போய் வருகிறீர்? இங்கே இருக்கும் வரையில் தினமும் போய்வந்தேன்.
உமது தகப்பனார் அங்கே இருந்தவரா? மண்டைதீவில் இருந்தவர்
உம்முடைய மனைவி பகுதியார் கிரமமாய் கோயிலுக்கு போகிறவரல்லவா ?  ஆம்  மாமனாரும் (பெண் தந்த) ஒரு பிரசித்த நொத்தாரிசாக இருந்தவர் . சங்கரப்பிள்ளை அவர் மூலமாகவே பல உறுதியை முடிப்பித்து இருக்கிறார்
சங்கரப்பிள்ளையை உமக்கு நேரே தெரியுமா? ஆம்
 இந்த் மாப்பாணர் குடும்பத்தில் உம்முடைய காலத்திலுள்ளவர்களை உமக்கு தெரியுமா? ஆம்

நல்லூர் கந்தசாமி கோயில் வழக்கு 1928 ஆம் ஆண்டு part 3

இந்த கோயிலுக்கும் அதற்கு ஏதும் தொடர்புண்டா? தம்பையா குருக்கள் முந்தி கந்தசாமி கோயில் பூசகருள் ஒருவராக இருந்தவர் . பூசையை விட்டபின் அந்த கோயிலை எதிரிக்கு கட்டினார்.
அவர்களுக்கு ஒரு தொடர்பும் இல்லையா ? இல்லை
 அம்போடு வளவில் நீங்கள் குடியிருக்கும் காணி எத்தனை பரப்பு? இருபத்தியேழு இருபத்தியெட்டு பரப்பிருக்கும்
அதெப்படி உங்களுக்கு வந்தது? என் தாயாரின் சீதனம்
அம்போடு வளவு என்னும் பெயரோடு எத்தனை காணிகள் உண்டு? மூன்று  , நாங்கள் இருபத்தொன்று . தம்பையா குருக்களுக்கு உரியதொன்று  மேற்கில் உள்ளதொன்று.
 மூன்றாவது காணி 13 ஆம் திருவிழா செலவிற்கு ஒருவரால் தரும சாதனஞ்செய்ய பட்டது . 50 பரப்பு கொண்டது
நீங்கள் குடியிருக்கும் வளவு ஊரவர்கள் தந்ததல்ல? இல்லை
பூந்தோட்டம் இருக்கும் வளவுக்கு பெயரென்ன? குருக்கள் வளவு
 தோம்பிலே குருக்கள் வளவு என்று சொல்லப்பட்டது எதனை? மேற்கு தெருவின் மேற்புறத்துள்ள நிலத்தை
தோம்பிலே குறிக்கப்பட்ட நிலம் இதுதான் என்று காட்ட உம்மால் முடியுமா? முடியாது

நல்லூர் கந்தசாமி கோயில் வழக்கு 1928 ஆண்டு -- part 2

நல்லூர் கந்தசாமி கோயில் வழக்கு 1928 ஆண்டு உரிமை தத்துவ வழக்கிலும் உம்மை கோர்ட்டில் விளங்கியதல்லவா? ஆம்
நீங்களும் உரிமை தத்துவத்திற் கோயிலாதனங்களை சேர்க்கவில்லையா? தரும சொத்தானபடியால் சேர்க்கவில்லை
கோயில் தரும பொருள் வகுப்பை சேர்ந்ததென்று  முந்தி சொன்னீரா?  இல்லை அது சொந்த பொருள் சிலருடைய வணக்கத்திற்காக கட்டப்பட்டது
ஆனால் ஆதியில் கோயில் பொதுக்கோயிலாகதான் கட்டப்பட்டதல்லவா? இல்லை
பொதுக்கோயில் என்ற எண்ணத்திற்றானே ஊரவர்கள் ஏதும் தானம் செய்து வந்தார்கள்? இல்லை
1916 இற்கு முந்தி கோயிற் பரிபாலனத்தை பற்றி ஒரு உறுதியுமில்லையல்லவா?  ஒரு உறுதி முன்பிருந்து ஆனால் இப்போது எங்கள் கைவசம் இல்லை
நீதிபதி : என்ன உறுதி ? கோயிலிருக்கும் நிலத்தை பற்றிய உறுதி
ஸ்ரீ குலசிங்கம் : கோயிற் பரிபாலனத்தை பற்றிய முதல் உறுதி உம்முடைய தாயாரால் 1916 ஆம் ஆண்டு முடிக்கப்பட்டதா? ஆம் தாயாரும் தமையனாரும் சேர்ந்து முடித்த உறுதியாகும்

நல்லூர் கந்தசாமி கோயில் வழக்கு August - 6 - 1928 Monday = part 1 -- இந்து சாதனம் பத்திரிகை

நல்லூர் கந்தசாமி கோயில் வழக்கு August - 6 - 1928 Monday
மேற்படி கோயில் வழக்கு சென்ற ஜூலை மாதம்  6 திங்கள் கிழமையும் செவ்வாய் கிழமையும் புதன் கிழமையும் பெரிய நீதி தலத்தில் (டிஸ்த்திரிக் கோர்ட்டில்) நீதிபதி மிஸ்ட்ரர் J C W றொக் முன்னிலையில் நிகழ்ந்தது.
1 ஆம் பிரதிவாதியாக ஸ்ரீ ரகுநாத மாப்பாண முதலியார் கூறியவை. (முற்றோடர்)
ஊரவர்களுடைய உதவியிருந்தால் தமக்கு நன்மையாக இருக்கும் என்று உமது தகப்பனார் நினைத்திருக்க கூடுமா?  இல்லை
டாக்குத்தர் கந்தையாவுக்கு மாறாகத்தான் ஊரவர்களுடைய உதவியை பெறவேண்டும் என்று உம்முடைய தகப்பனார்  முயற்சி செய்யவில்லையா? அப்படிஇல்லை
டாக்குத்தர் கந்தையா சில துஷ்டர்களை சேர்த்து கொண்டு அவர்களுக்கு குடிக்க கொடுத்து கலக்கம் விளைவிக்க வேண்டும் என்று முயற்சி செய்த பொழுது எனது தகப்பனாரும் சிலரை வைத்திருந்தார்
உமது தகப்பனார் கோயிலடியில் கலகத்திற்காக ஆள் சேர்த்ததுண்டா?

Friday, August 19, 2022

இலங்கை சீனா ரப்பர் அரிசி பண்டமாற்று 70 ஆண்டு நிறைவு rubber-rice barter agreement with China

 ராதா மனோகர் :   இலங்கை சுதந்திரம் அடைந்த காலக் கட்டத்தில் உணவு உற்பத்தியில் மிகவும் பின்தங்கி இருந்தது
இப்போது இருக்கும் பெரும்பாலான விவசாய குடியேற்றத்திட்டங்கள் அப்போது இருக்கவில்லை
அரிசி தட்டுப்பாடு பயங்கரமாக இருந்தது   அன்று இந்தியாவின் உணவு உற்பத்தியும் மிக மோசமான நிலையிலேயே இருந்தது  இந்த பின்னணியில் இலங்கையின் அரிசி தேவையில் சீனாவின் பங்களிப்பு என்னவாக இருந்தது என்று தெரிந்து கொள்வது நல்லது  
அன்று சீனா மாவோ தலைமையில் அமைந்த ஒரு தீவிர கம்யூனிச தேசமாக கருதப்பட்டது  பல நாடுகள் சீனாவை அங்கீகரிக்கவே இல்லை   


 அன்று இலங்கையின் அரிசி தேவையை நிறைவு செய்யகூடிய ஒரு நிலையில் சீனா இருந்தது . இலங்கையின் ரப்பர் சீனாவுக்கு தேவையாக இருந்தது ஆனால் அமெரிக்க பிரிட்டன் இந்தியா உட்பட பல நாடுகள் இலங்கை சீனாவோடு ஒரு வியாபார ஒப்பந்தம் செய்ய முயலும் என்பதை கற்பனை செய்து கூட பார்க்காத நிலைமை இருந்தது ..
இந்த பின்னணியில் இருந்து ரப்பர் அரிசி டீல் பற்றி தெரிந்து கொள்வது நல்லது  
ஆசியா டைம்ஸ்   : 1952  October 4 இல் இலங்கை அரசு மிகவும் துணிச்சலாக சீனாவுடன் ரப்பர்-அரிசி பண்டமாற்று ஒப்பந்தம் செய்து கொண்டது

Sunday, August 14, 2022

யாழ்ப்பாண பல்கலை கழகம் உருவான வரலாறு பற்றி சில முக்கிய செய்திகள்.. 1961 ஈழநாடு யாழ்ப்பாணம்..


 ராதா மனோகர்
  :  யாழ்ப்பாண பல்கலை கழகம்   உருவான வரலாறு பற்றி பல செய்திகள் இன்னும்  பொது வெளிக்கு வரவில்லை என்றே கருதுகிறேன்
சேர் பொன்னம்பலம் ராமநாதன் அவர்கள் ராமநாதன் கல்லூரியையும் பரமேஸ்வரா கல்லூரியையும் கட்டும்பொழுதே அவை ஒரு பல்கலை கழகமாக உருவாக்கி வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார் என்று அவரின் செயலாளராகவும் அன்பு நண்பராகவும் இருந்த மறைந்த திரு சங்கரப்பிள்ளை அய்யா அவர்கள் தனது அந்திம காலங்களில் பலரிடம் கூறியிருக்கிறார்.
அடியேன் சிறுவயதில் அவரின் வீட்டிற்கு செல்வதுண்டு . சங்கரப்பிள்ளை அய்யாவின் மகன்தான் திரு பண்டிதர் ராமச்சந்திரன் அவர்கள்  பன்மொழி திறமையும் பேரறிவும் கொண்டவர்  
திரு ராமச்சந்திரனை பார்க்கவும் பேசவும் கூட்டங்கள் அலைமோதும்.
அக்கூட்டத்தில் ஒரு சிறுவனாக அடியேனும் இருந்திருக்கிறேன்
யாழ்ப்பாண பல்கலை கழகத்தை பற்றி சேர் பொன்னம்பலம் ராமநாதன் கண்ட கனவு பற்றி நான் அறிந்தது அந்த காலங்களில்தான்.

Saturday, August 6, 2022

அமெரிக்கா தமிழரசு சமரசம் ! தமிழினத்தை அடைவு வைப்பதா? தலைவர்கள் சூழ்ச்சி அம்பலம்!

ராதா மனோகர்

ஈழகேசரி .  யாழ்ப்பாணம்  .. 25 - 05 - 1952
அமெரிக்கா  தமிழரசு சமரசம் ! தமிழினத்தை அடைவு வைப்பதா?  தலைவர்கள் சூழ்ச்சி அம்பலம்!
 சமீபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மானிப்பாயில் நடைபெற்ற  ஒரு கூட்டத்தில் தமிழரசு கட்சியை சேர்ந்த ஒரு அபேட்சகரான திரு  சி வன்னியசிங்கம் தமிழரின் எதிர்காலத்தை பெரிதும் பாதிக்க கூடிய ஒரு விடயத்தை அவிழ்த்து விட்டிருக்கிறார் என அறியக்கிடக்கின்றது
கொழும்பில் உள்ள அமெரிக்கன் எம்பசி என்ற அமெரிக்க ஸ்தானிகர் காரியாலயத்தினர் தமிழரசு கட்சியினரை ஒரு விருந்து உபசாரத்திற்கு அழைத்தார் என்றும் தமிழரின் எதிர்காலத்தை பற்றி தமிழரசு கட்சியினருடன் அமெரிக்கர் சம்பாஷித்தனர் எனவும்  திரு சி வன்னியசிங்கம் மானிப்பாய் கூட்டத்தில் கூறினார் எனவும் தெரியவருகிறது.
 தமிழர் பிரிந்து வாழ்வதாயின் அமெரிக்க உதவ முன்வரும் என்றும் அவர்கள் கூறினார்களாம்.
இவ்விஷயத்தை அமெரிக்க கலாச்சாரத்தில் நல்ல பரிச்சயம் வாய்ந்த திரு எஸ் ஜெ வி செல்வநாயகம் அவர்கள் தமிழரசு கட்சியினரால் நடப்படும் பத்திரிகை (சுதந்திரன்) காரியாலயத்திற்கு சென்று தெரிவித்தபோது அப்பத்திரிகையை நடத்துபவர்கள் (எஸ் டி சிவநாயகம்) தமிழ் மக்கள் தங்கள் எதிர்காலத்தை அமெரிக்கரிடம் தாரைவார்த்து கொடுப்பது அபாயகரமானது என்று நெருப்பெடுத்தார்கள் என பேசப்படுகிறது.

Friday, July 29, 2022

தமிழ் பிரதேசங்களுக்கு ஒரு வானொலி நிலையம் - யாழ்ப்பாண எம்பி திரு அல்பிரட் துரையப்பா!


 ஈழநாடு 7 - 6- 1961 யாழ்ப்பாணம்
தமிழ் பிரதேசங்களுக்கு ஒரு வானொலி நிலையம் - யாழ்ப்பாண எம்பி ( திரு அல்பிரட் துரையப்பா) நடவடிக்கை
தமிழ் பேசும் பிரதேசங்களில் ஒரு கவின் கலைக்கல்லுரியும் ஆயுர்வேத வைத்திய நிலையமும் வானொலி நிலையமும் நிறுவப்பட இருக்கிறது.
இவைகள் இந்த ஆண்டு அல்லது அடுத்த நிதியாண்டுக்குள் நிறுவப்படலாம்.
இதற்கான நடவடிக்கைகளை நான் எடுத்து வருகிறேன் என்று யாழ்ப்பாண எம்பி திரு அல்பிரட் துரையப்பா பத்திரிகைக்கு விட்டுத்த அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்
திரு அல்பிரட் துரையப்பா அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மொழி உரிமைக்காக போராடிவரும் அதே வேளையில் எமது தேவைகளையும் எமக்கு கிடைக்க கூடிய உதவிகளையும் உரிமையோடு பெற்று கொள்வது அவசியமாகும்
கிடைக்கக்கூடிய உதவிகளை கைவிடாது நமது நாட்டின் தேவையை பூர்த்தி செய்வது அத்தியாவசியமாகும்
அவர் தமது தொகுதிக்கு இவ்வாண்டில் செய்து முடிக்கவிருக்கும் வேலைகளை பற்றியும் குறிப்பிட்டுள்ளார் அவையாவன:

Wednesday, July 27, 2022

யாழ்ப்பாண மேயர் திரு அல்பிரட் துரையப்பாவின் 47 ஆவது நினைவு அஞ்சலி கட்டுரை

 


யாழ்ப்பாண மேயர் திரு அல்பிரட் துரையப்பாவின் 47 ஆவது நினைவு அஞ்சலியாக இந்த கட்டுரை
திரு அல்பிரட் துரையப்பாவின் யாழ் மேயர் பதவி கால சாதனைகளை மக்கள் அறிந்திருக்கும் அளவுக்கு அவர் யாழ்ப்பாண தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக செயலாற்றிய வரலாறு பொதுவெளிக்கு மறைக்க படுகிறது   அவை இனி ஒவ்வொன்றாக வெளிவரும்  அந்த வகையில் வெளிவரும் முதல் செய்தி இதுவென்று எண்ணுகிறேன் .

ஈழநாடு 18 - 3- 1961 யாழ்ப்பாணம்
வடக்கு கிழக்கு மாகாண மக்களுக்கு   முதல் வெற்றி!
சத்தியாகிரக எம்பிக்களுக்கு 3 மாத ரஜா (அதாவது விடுமுறைங்கோ  ஹரிஹர சர்மாவின் தமிழ் இதுதானுங்கோ)
சத்தியாகிரகம் செய்யும் தமிழரசு கட்சி எம்பிக்களுக்கு பார்லிமெண்டு சபை இவ்வாரம் மூன்று மாத ராஜா அளித்திருக்கிறது
அவர்களுக்கு இந்த ராஜாவை கொடுக்கவேண்டும் என்று யாழ்ப்பாண தொகுதி பிரதிநிதி திரு அல்பிறெட் துரையப்பா (சுயேட்சை)  ஒரு பிரேரணையை கொணர்ந்தார்.

Monday, July 4, 2022

எமில் சவுந்தரநாயகம் ! திரைப்படங்களை விட கவர்ச்சிகரமான திருப்பங்கள் நிறைந்த தில்லுமுல்லு வரலாறு! .. இலங்கை தமிழர்

ராதா மனோகர் : திரு.எமில் .சவுந்தரநாயகம் (6 July 1923 – 21 December 1976) இலங்கை தமிழரான இவர்  ஐம்பது அறுபதுகளில் ஐரோப்பாவையும் கடந்து உலகையே கலக்கிய ஒரு மோசடிக்காரன் இவரது முழுபெயர் (Michael Marion Emil Anacletus Pierre Savundranayagam ).இவரது மனைவி பெயர் புஷ்பம் .இவருக்கு இரண்டு ஆண்குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும்  பிறந்ததாக தெரிகிறது .. இவரின்  மோசமான நடவடிக்கைகளால் இவரது குடும்பம்  வாழ்க்கை முழுவதுமே  தலைமறைவாக வாழவேண்டிய ஒரு நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது.
அன்றைய பிரித்தானிய யுத்த அமைச்சர் ஒரு பெண் உளவாளியோடு தொடர்பு கொண்டிருந்தமையால் பிரித்தனிய அரசே கவிழ கூடிய நிலை உருவானது , அந்த பெண் உளவாளி எமில் சவுந்தர நாயகத்தில் பணத்தில் பிரித்தானிய அமைச்சரை வேவு பார்த்ததாக நம்பபட்டது, அதில் அந்த அமைச்சர் தற்கொலை செய்துகொண்டார், எமில் தப்பி விட்டார்,

இலங்கை சுதந்திரம் அடைந்த பொழுது  24 வயது நிரம்பிய எமில் சவுந்தர நாயகம் அங்கு வர்த்த முயற்சிகளை மேற்கொண்டிருந்தார் .ஆனால் அதில் வெற்றி பெறமுடியவில்லை, அந்த இளம் வயதிலேயே இவருக்கு சர்க்கரை நோய் தாக்கியது, நிரந்தரமாகவே இன்சுலின் பாவிக்கும் அளவுக்கு சர்க்கரை நோய்க்கு ஆட்பட்டிருந்தார். பிரிட்டிஷ் விமான படையில் சேர்வதற்கு முயற்சித்தார். இரண்டாவது உலக யுத்தம் காரணமாக அது கைகூடவில்லை.

சிங்கள மொழியானது பார்பனீயத்திடம் இருந்த பௌத்தத்தை பாதுகாத்த ஒரு மொழி!

 ராதா மனோகர் : இலங்கை பொலநறுவை என்ற இடத்தில்,
ஒரு நீண்ட கற்பாறை மீது சிங்கள மொழியில் பல செய்திகளை செதுக்கி வைத்திருக்கிறார்கள்
சிங்கள மொழியை கற்க விரும்பும் எவருக்கும் சரியான வழி காட்டியாக இந்த கல் புத்தகம் பேருதவியாக  இருக்கும் என்று இந்த காணொளியில் சிங்கள மொழியில் கூறப்படுகிறது
இது மன்னர் நிசங்க மல்லாவின் (1187-1196) புகழ்பெற்ற படைப்புகளில் ஒன்றாகும், இதில்  நிசங்க மன்னரின்  ஆட்சி பற்றிய விபரங்களும்
அவர்  இலங்கையின் அரசராக இருப்பதற்கான தகுதியை விவரிக்கிறது.
26'10 "அடி (8.2 மீட்டர்) நீளமும், 4'7" அடி (1.4 மீட்டர்) நீளமும் கொண்ட இந்த பாரிய கற்பாறை
மஹியங்கனா பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டது.
இப்பாறையில்  3 நெடுவரிசைகளில் எழுதப்பட்டுள்ளது
மொத்தமாக  7200 வரிகளில் 4300 க்கும் மேற்பட்ட சொற்களை கொண்டுள்ளது.
இதன் எழுத்துக்களின் மீது உலோக துகள்கள் படிமங்களாக இருப்பது கண்டு பிடிக்க பட்டுள்ளது
சிங்கள மொழியானது இலங்கை முழுவதும் வட்டார பேதங்கள் இன்றி பேசப்படுவதற்கும் எழுதப்படுவதற்கும் ஆதாரமாக இந்த கல் புத்தகம் இருக்கிறது என்று கருதப்படுகிறது

Sunday, July 3, 2022

இலங்கை இந்திய வம்சாவளி மக்களின் வாக்குரிமை பறிப்பின் பின்னணியில் இந்திய அரசும் அரசும் இருந்திருக்கிறதா?


 ராதா மனோகர்
  : இலங்கை தமிழர் அரசியலில் மீண்டும் மீண்டும் ஒரு பெரிய பொய்யை கூறிக்கொண்டே இருக்கிறார்கள்
திரு செல்வநாயகமும் திரு நாகநாதனும் கதை வசனம் எழுதி  அரங்கேற்றிய இந்த நாடகம் இன்றுவரை தொடர்கிறது
திரு சுப்பையா பிள்ளை நடேச பிள்ளை என்றவரில் இருந்து பல விடயங்களை நோக்க வேண்டி உள்ளது
எல்லோரும் வசதியாக இவரை மறந்து விட்டுத்தான் அரசியல் வரலாறு பற்றி பேசுகிறார்கள் அல்லது கதை அளக்கிறார்கள்.
இவர் காங்கேசன் துறை எம்பியாக சுதந்திரத்திற்கு முன்பு இரு தடைவைகள் இருந்தார்
சுதந்திரத்திற்கு பின்பு 1952 இல்  காங்கேசன் துறை தொகுதியில் இருந்து செல்வநாயகத்தையே தோற்கடித்து   எம்பியானார் . அதன் பின்பு ஐக்கிய தேசிய கட்சி அரசில்  அமைச்சரானார்
இவர் ஐக்கிய தேசிய கட்சியின் நிறுவனர்களில் ஒருவர் . ஐக்கிய தேசிய கட்சியின் அத்தனை நிகழ்ச்சி நிரலிலும் பங்கு பற்றியவர்.
இவர் தஞ்சாவூரை சேர்ந்தவர் அங்கு நகராட்சி கவுன்சிலராகவும் இருந்தவர்  இவர் சேர் பொன்னம்பலம் ராமநாதனின் மருமகனாகும்
மேலும் இவர் இலங்கை அமைச்சராக இந்தியாவுக்கு சென்று  யாழ்ப்பாண புகையிலை வர்த்தக தடையை நீக்குமாறு கேட்டுக்கொண்டு அதை சாதித்தவர்  
இதுவரை காலமும் இலங்கை இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமை நீக்கம் பற்றி இவரது பங்கு பற்றி எவரும் ஏன் குறிப்பிடுவதில்லை?

Friday, July 1, 2022

இலங்கை திராவிட முன்னேற்ற கழக தடைக்கு எதிராக திரு அமிர்தலிங்கம் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை

 ராதா மனோகர் : . 22.07.1962  இல் ஆட்சியில் இருந்த ஸ்ரீ மாவோ தலைமையிலான அரசு இலங்கை திராவிட முன்னேற்ற கழகத்தை தடை செய்வதாக அறிவித்தது . இந்த தடைக்கு எதிராக   நாடாளுமன்றத்தில் திரு அ அமிர்தலிங்கம் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார். வவுனியா எம்பி சிவசிதம்பரம் உட்பட பலர் இதை கண்டித்து உரையாற்றினார்க்ள
திரு அமிர்தலிங்கம் அவர்கள் உரையாற்றுகையில்  
...
"இந்த நாட்டில் மலையகத் தமிழ்மக்கள் மத்தியில் மூடப் பழக்க
வழக்கங்கள் ஒழித்து, சாதி பேதங்களை அகற்றி, அவர்களுடைய
மொழி, குடியியல் உரிமைகளைப் பெற்று, அவர்களும் இந்த
நாட்டில் மனிதர்களாக தன்மானத்தோடு வாழ வேண்டுமென்ற ஒரே
இலட்சியத்துக்காக உழைத்துவந்த திராவிடர் முன்னேற்றக்
கழகத்தை அரசாங்கம் தடைசெய்தது ஜனநாயகத்துக்கு
முரணானது! மனித உரிமைக்கு மாறானது என்பதைக்
கூறிக்கொள்கிறேன்.
உண்மையில் இந்தக் கழகம் மேற்கொண்ட
எந்த நடவடிக்கைக்காக இந்தத் தடை போடப்பட்டிருக்கிறது
என்பதை அரசாங்கத்திடமிருந்து நான் தெரிந்துகொள்ள
விரும்புகிறேன்.