ஈழகேசரி . யாழ்ப்பாணம் .. 25 - 05 - 1952
அமெரிக்கா தமிழரசு சமரசம் ! தமிழினத்தை அடைவு வைப்பதா? தலைவர்கள் சூழ்ச்சி அம்பலம்!
சமீபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மானிப்பாயில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் தமிழரசு கட்சியை சேர்ந்த ஒரு அபேட்சகரான திரு சி வன்னியசிங்கம் தமிழரின் எதிர்காலத்தை பெரிதும் பாதிக்க கூடிய ஒரு விடயத்தை அவிழ்த்து விட்டிருக்கிறார் என அறியக்கிடக்கின்றது
கொழும்பில் உள்ள அமெரிக்கன் எம்பசி என்ற அமெரிக்க ஸ்தானிகர் காரியாலயத்தினர் தமிழரசு கட்சியினரை ஒரு விருந்து உபசாரத்திற்கு அழைத்தார் என்றும் தமிழரின் எதிர்காலத்தை பற்றி தமிழரசு கட்சியினருடன் அமெரிக்கர் சம்பாஷித்தனர் எனவும் திரு சி வன்னியசிங்கம் மானிப்பாய் கூட்டத்தில் கூறினார் எனவும் தெரியவருகிறது.
தமிழர் பிரிந்து வாழ்வதாயின் அமெரிக்க உதவ முன்வரும் என்றும் அவர்கள் கூறினார்களாம்.
இவ்விஷயத்தை அமெரிக்க கலாச்சாரத்தில் நல்ல பரிச்சயம் வாய்ந்த திரு எஸ் ஜெ வி செல்வநாயகம் அவர்கள் தமிழரசு கட்சியினரால் நடப்படும் பத்திரிகை (சுதந்திரன்) காரியாலயத்திற்கு சென்று தெரிவித்தபோது அப்பத்திரிகையை நடத்துபவர்கள் (எஸ் டி சிவநாயகம்) தமிழ் மக்கள் தங்கள் எதிர்காலத்தை அமெரிக்கரிடம் தாரைவார்த்து கொடுப்பது அபாயகரமானது என்று நெருப்பெடுத்தார்கள் என பேசப்படுகிறது.
அதற்கு செல்வநாயகம் பின்வரும் சமாதானத்தை குளிர்மையாக கூறினாராம்.
அமெரிக்க விரைவில் உலக வல்லரசாக விளங்க போகிறது.
ஆனபடியால் அவர்களின் உதவியை இப்போதே நாடினால் அப்படி என்ன குடி முழுகி போய்விடும்?
இந்த அழகில் கொழும்பில் இருந்து வெளியாகும் கொம்யூனிஸ்டு ஆதரவுடன் வெளியாகும் பீப்பிள்ஸ் வாய்ஸ் என்ற ஆங்கில வெளியீடு (16 - 05 = 1952 இதழில் எழுதியிருப்பதை கவனித்தல் நன்று.
இவர்களுக்கு உங்கள் வாக்குகளை அளியுங்கள் என்ற தலைப்பில் அதன் ஆசிரியர் எழுதுவதாவது:
இந்த அபேட்சகர்கள் இலங்கைக்கு உண்மையான சுதந்திரம் வேண்டும் என்று அதிகாரத்துடன் ஏகோபித்து கேட்கின்றனர்.
எமது நாட்டை சுரண்டும் அமெரிக்காவினதும் பிரித்தானியாவினதும் முந்தானைகளில் கட்டுண்டு வாழமாட்டோம்
இவ்வாறு வீர சுதந்திரம் பேசும் அப்பத்திரிகையானது வாக்காளர்களை தமிழரசு கட்சியை ஆதரிக்குமாறு கேட்கும்போது அக்கட்சியின் தலைவர் அமெரிக்காவுக்கு இலங்கை தமிழரை அடைவு வைக்க நினைக்க சொல்லப்படும் சூழ்ச்சியை அவர் அறியவில்லை போலும்.
சோழியன் குடுமி சும்மாஆடுமா? மானத்தமிழினமே இத்தகைய தலைவர்களை பற்றி நீ என்ன நினைக்கிறாய்?
ஈழகேசரி . யாழ்ப்பாணம் .. 25 - 05 - 1952
No comments:
Post a Comment