Wednesday, July 12, 2023

திரு அமிர்தலிங்கம்.. 34 ஆண்டு நினைவேந்தல்! (ஜூலை 13, 1989 கொழும்பில்)

May be an image of 1 person and smiling

திரு அமிர்தலிங்கம் அவர்களின் 34  ஆண்டு நினைவேந்தல்! (ஜூலை 13, 1989 கொழும்பில்)
இலங்கை திராவிடர் கழகத்தின் இந்தி எதிர்ப்பு போராட்ட குழுவின் செயலாளராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய திரு அமிர்தலிங்கம்,
பின்பு திரு எஸ் ஜெ வி செல்லநாயகத்தின் தமிழரசு கட்சியில் தன்னை இணைத்து கொண்டு நீண்ட அரசியல் பயணத்தை தொடர்ந்தார்.
திரு அமிர்தலிங்கம் அவர்கள் சுயமரியாதை சமூகநீதியை பேசிய திராவிட இயக்கத்தில் இருந்து தடம் மாறி,  எந்த அரசியல் சித்தாந்தமும் இல்லாத,
 தமிழ் தேசிய அரசியலுக்குள் நுழைந்தது ஒரு பெரிய வரலாற்று தவறாகவே முடிந்தது!
இவரின் அரசியலை புலிகள் முடித்து வைத்தாலும் உண்மையில் இந்த முடிவை தீர்மானித்த முக்கிய காரணியாக திரு எஸ் ஜெ வி செல்வநாயகத்தை தான் நாம் குறிப்பிடவேண்டும்.
திரு அமிர்தலிங்கம் மட்டுமல்ல பிரபாகரனும்கூட எஸ் ஜெ வி செல்வநாயகத்தின் தவறான வெறுப்பு அரசியலின் பகடைக்காய்கள்தான்!
திரு அமிர்தலிங்கம் அவர்களின் திராவிட அரசியல் ஈடுபாட்டின் ஒரு சாட்சியாக இலங்கை திராவிட முன்னேற்ற கழகம் தடை செய்யப்பட்டபோது அவர் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை திகழ்கிறது


22.07.1962  இல்  இலங்கை திராவிட முன்னேற்ற கழகத்தை தடை செய்யும் சட்டத்திற்கு எதிராக வட்டுக்கோட்டை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்
அவர்கள் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை:

)நமதுமலையகம்)  :  "இந்த நாட்டில் மலையகத் தமிழ்மக்கள் மத்தியில் மூடப் பழக்க வழக்கங்கள் ஒழித்து, சாதி பேதங்களை அகற்றி,
அவர்களுடைய மொழி, குடியியல் உரிமைகளைப் பெற்று,
அவர்களும் இந்த நாட்டில் மனிதர்களாக தன்மானத்தோடு வாழ வேண்டுமென்ற ஒரே
இலட்சியத்துக்காக உழைத்துவந்த திராவிடர் முன்னேற்றக் கழகத்தை அரசாங்கம் தடைசெய்தது ஜனநாயகத்துக்கு முரணானது!
மனித உரிமைக்கு மாறானது என்பதைக் கூறிக்கொள்கிறேன்.
உண்மையில் இந்தக் கழகம் மேற்கொண்ட எந்த நடவடிக்கைக்காக இந்தத் தடை போடப்பட்டிருக்கிறது
என்பதை அரசாங்கத்திடமிருந்து நான் தெரிந்துகொள்ள  விரும்புகிறேன்.
இந்த கௌரவம் மிக்க சபையிலே சிம்மாசனப் பிரசங்க விவாதத்தில் பேசிய பல்வேறு அங்கத்தவர்களும் இந்த திராவிடர் முன்னேற்றக் கழகத்தினைப் பற்றி குறிப்பிட்டார்கள்.
கௌரவ காலிப் பிரதிநிதி டபிள்யூ தஹா நாயக அவர்களும் திராவிடர்
முன்னேற்றக் கழகத்தினைப் பற்றிக் குறிப்பிட்டார்கள்.
எனக்கு முன் பேசிய மட்டக்களப்பு இரண்டாவது பிரதிநிதி ஏ.எப்.எம். மரைக்காயர் அவர்களும், நுவரெலியா பிரதிநிதி வில்லியம் பெர்னாண்டோ அவர்களும் குறிப்பிட்டார்கள்.
வெலிமடைப் பிரதிநிதி கே.எம்.பி. இராஜரத்தினாவும், அவரது பாரியார் குசுமா இராஜரத்தினாவும் இ.தி.மு.க-வுக்கு எதிராக கர்ஜனை செய்தார்கள்.
கம்யூனிஸ்ட் கட்சியின் கம்புறுபிட்டி பிரதிநிதி பேர்ஸி விக்கிரம சிங்க அவர்களும் குறிப்பிட்டார்கள்.
இவர்கள் எல்லோரும் குறிப்பிடும் இந்தப் பூதம் என்ன என்பதை நான் குறிப்பிட வேண்டியதாகிறது.
இலங்கை திராவிடர் முன்னேற்றக் கழகம் என்பது இன்று நேற்று தோன்றிய ஓர் இயக்கமல்ல.
நான் இலங்கையில் சர்வகலாசாலையில் 1946 - 47-ம் ஆண்டளவில் கல்வி கற்றுக்கொண்டிருந்த காலத்திலேயே இ.தி.மு.கழகம் இருந்தது.
கடந்த 16 ஆண்டுகளாக இந்தக் கழகம் இந்த நாட்டில் இயங்கி
வருகின்றது.
அவர்களது நோக்கம் இலங்கையில் வாழ்கின்ற மலைநாட்டுத் தமிழர்கள் மத்தியில் முக்கியமாக சாதியின்
பெயரால் காணப்படும் பேதங்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதேயாகும்.
மூட நம்பிக்கையில் சிக்கி, காடனையும் மாடனையும் வணங்கி,பலியிட்டுக் கூத்தாடி வாழும் மூட நம்பிக்கையில் இருந்து அவர்களை விடுவிக்க வேண்டும் என்பதாகும்.
மலைநாட்டு மக்கள் சுயமரியாதை பெற்றவர்களாக,
பகுத்தறிவுப் பாதையில் செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடனேயே இ.தி.மு.க. இயங்கி வருகிறது.

பெயரளவில்தான் தென்னிந்தியாவில் இயங்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் இ.தி.மு.க-வுக்கும் ஒற்றுமை இருக்கிறதே தவிர,
ஸ்தாபனரீதியாக தொடர்பு எதுவும் இல்லை என்பதைத் தெள்ளத்தெளிவாகக் கூற வேண்டியது என்
கடமையாகும்.
இந்திய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் அண்ணாதுரை அவர்களும், செயலாளர் நெடுஞ்செழியன் அவர்களும்,
இலங்கை திராவிடர் முன்னேற்றக் கழகத்துக்கும் தங்களுக்கும், எதுவிதமான
தொடர்பும் கிடையாது என்பதை எல்லோருக்கும் கூறியிருக்கிறார்கள்.
இ.தி.மு.க. என்ற பெயரில் மூன்று ஸ்தாபனங்கள் இருந்தாலும்,
இரண்டு இயக்கங்கள் கொழும்பில்தான் இருந்துவருகின்றன.
தோட்டப்பகுதியில் இருக்கும்
மற்றொரு இயக்கம்   திருவாளர் இளஞ்செழியன் என்பவரை செயலாளராகக் கொண்டது.
அவர்களுடைய நோக்கம் நாட்டைப் பிரிப்பதல்ல.
இ.தி.மு.க-வின் நோக்கம் நாட்டைப் பிரிப்பதுதான் என்று யாராவது நிரூபிப்பார்களேயானால், நான் என்னுடைய நாடாளுமன்ற பதவியை ராஜினாமா செய்ய ஆயத்த இருக்கிறேன்!

No comments:

Post a Comment