Sunday, April 13, 2025

உலக சுயமரியாதை கழகம் தொடங்கப்பட்டுள்ளது

ராதா மனோகர் : ஜாதி வியாதிக்கு ஒரே ஒரு மருந்து சுயமரியாதை பிரசாரம்தான்.
இந்தியர்களும் இலங்கையர்களும்  எங்கெல்லாம் புலம் பெயர்கிறார்களோ அங்கெல்லாம் ஜாதி வியாதியையும் ஓரளவு பரப்புகிறார்கள்.
ஜாதி என்றால் என்னவென்றே தெரியாத மேற்கு நாடுகளிலும் கூட இந்த ஜாதியை கொண்டு போய் சேர்க்கிறார்கள்.
குறிப்பாக அந்தந்த நாடுகளில் உருவாகும் அடுத்தடுத்த தலைமுறையினரிடமும் கூட இந்த வியாதியை கடத்துவதில் சிலர் இன்பம் காண்கிறார்கள்.
இன்னும் ஒரு படி மேலே சென்று  அந்தந்த நாட்டு மண்ணின் மைந்தர்களுக்கே கூட இந்த ஜாதியை கடத்தும் முயற்சியும் நடக்கிறது
இந்த ஜாதி அபிமானிகளுக்கு சுயமரியாதை கோட்பாட்டில் நம்பிக்கை இல்லை



மனித விழுமியங்களை பெரிதும் மதிக்கும் நாடுகளில் சகமனிதரை மனிதர்களாகவே மதிக்கும் சுயமரியாதை பண்பு இருக்கிறது.

ஜாதியால் பீடிக்கப்பட்ட மக்களிடையேதான் சுயமரியாதை பண்பு பற்றிய புரிதல் குறைவாக உள்ளது அல்லது அடியோடு இல்லை எனலாம்.
உலகம் முழுவதும் பரவி இருக்கும் ஜாதி தேச பூர்வீக குடிமக்களிடையே சுயமரியாதை கருத்துக்கள் பரவ வேண்டும்
ஜாதி என்பது எவ்வளவு கேவலமான ஒரு விடயம் என்ற புரிதல் உண்டாக்கவேண்டும்
அதற்கான முயற்சிகளை நாம் ஒண்றிணைந்து முன்னெடுப்போம்!

1925 ஆண்டு  தமிழ்நாட்டில் ( அன்றைய சென்னை மாகாணத்தில் ) சுயமரியாதை இயக்கம் தந்தை பெரியார் மற்றும் பல தோழர்களால் தொடங்கப்பட்டது!
ஒரு சமூக அரசியல் மறுமலர்ச்சி இயக்கமாக அன்று உருவான சுயமரியாதை இயக்கம்,
 இன்று சரியாக ஒரு நூற்றாண்டை  எட்டி உள்ளது.

தெற்காசியாவில்  ஒரு அரசியல் சமூக சித்தாந்த கோட்பாட்டு இயக்கமாக உருவான சுயமரியாதை இயக்கம்  இன்று பெருவெற்றி பெற்று அடுத்த அடுத்த  படிகளை நோக்கி பீடு நடை போடுகிறது

மனிதரை மனிதர் பிறப்பின் அடிப்படையிலோ அல்லது வேறு என்ன காரணத்தினாலோ  பாகு பாடு காட்டி இழிவு படுத்தும் கொடுமைக்கு முடிவு கட்டுவோம்.
இந்த முயற்சியின் அடுத்த கட்டமாகத்தான்  உலக சுயமரியாதை கழகம் தொடங்கப்பட்டுள்ளது.

மக்களின் புலம் பெயர்தல் என்பது மூட நம்பிக்கைளின் புலம் பெயர்தலாக  மாறிவரும் மடமைக்கு முடிவு கட்டும் நோக்கத்தில் நாம் அடியெடுத்து வைக்கிறோம்

சுயமரியாதையே  உண்மையான சுதந்திரம்!
சுயமரியாதையே உண்மையான சுயமுன்னேற்றம்!
சுயமரியாதையை போற்றும் உலக சுயமரியாதை கழகத்தின்  பயணத்தில் இணைந்து கொள்ளுமாறு அனைத்து  சுயமரியாதையாளர்களையும்  அன்போடு அழைக்கிறோம் !   


No comments:

Post a Comment